மீன் - Fish


பொருளடக்கம்


அடிப்படை தகவல்கள்



கூட்டு மீன் வளர்ப்பு



அலங்கார மீன்வளர்ப்பு



அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்



அடிப்படை தகவல்கள்



இரகங்கள்

🐡 கெளுத்தி, ரோகு, கட்லா, சில்வர் கெண்டை, புல் கெண்டை, விரால், மிர்கால் ஆகிய இரகங்கள் பண்ணை குட்டையில் வளர்க்க ஏற்ற இரகங்கள் ஆகும்.

பண்ணை குட்டை அமைத்தல்

🐡 மீன்குளத்தை செவ்வக வடிவத்தில் அமைத்தால், கையாள்வது சுலபமாக இருக்கும். இருக்கும் இட வசதி, தண்ணீர் வசதி ஆகியவற்றைப் பொறுத்து, குளத்தின் அளவைத் தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனால், ஆழம் ஐந்தடிக்குக் குறையாமல் இருக்க வேண்டும். களிமண் தான் இதற்கு ஏற்றது. இல்லையேல் வண்டல் மண் நிரப்பிக் கொள்ளலாம். 5 அடி உயரத்துக்கு தண்ணீரை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். தண்ணீர் அதிகமாக நிறுத்தும்போது, வெயிலின் தாக்கம் குறைவாகவும், திருட்டுப் போகாமலும் பாதுகாப்பாக இருக்கும்.

மீன் வளர்ப்பு

🐡 ஒரு மாத வயதுடைய குஞ்சுகளாக வாங்கி விட வேண்டும். அதற்கும் குறைவான வயதுடைய குஞ்சுகளை விட்டால் சேதாரம் அதிகமாக இருக்கும். ஒரே அளவுள்ள குஞ்சுகளாக விடுவதும் முக்கியம். இல்லாவிடில், பெரியக் குஞ்சுகள், சிறியக் குஞ்சுகளைத் தின்றுவிடும். மீன்குஞ்சு விட்ட மறுநாள் தாமரை அல்லது அல்லிக் கிழங்குகளை ஏரிகளில் இருந்து எடுத்து வந்து குளத்தின் நான்கு பகுதிகளிலும் நான்கு கிழங்குகளை, கரையில் இருந்து ஐந்து அடி இடைவெளிவிட்டு குளத்துக்குள் ஊன்றிவிட வேண்டும். கிழங்கு வளர்ந்து படர்ந்து விடும். அவற்றின் நிழல் குளிர்ச்சியாக இருப்பதால் வெயில் நேரங்களில் மீன்கள் வந்து தங்கிக்கொள்ளும்.

தீவன மேலாண்மை

🐡 மீன்களுக்கு குருணை வடிவிலான சரிவிகித உணவு கடைகளில் கிடைக்கிறது. தவிடு, பிண்ணாக்கைத் தீவனமாகக் கொடுப்பதைவிட இது செலவு குறைவாக இருக்கும். ஒரு மீனுக்கு அதன் உடல் எடையின் அளவில் 2 முதல் 5 சதவிகித அளவுக்கு தினமும் உணவு கொடுத்தால் போதுமானது. மாதத்திற்கு ஒரு முறை சிறிது மீன்களைப் பிடித்து, அவற்றின் எடையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

🐡 ஒரு நாளுக்கான தீவனத்தை மொத்தமாகக் கொடுக்காமல் இரண்டாகப் பிரித்து காலை, மாலை என இரண்டு வேளைகளில் கொடுக்க வேண்டும். இடத்தையும் நேரத்தையும் மாற்றாமல் தினமும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் தீவனத்தை இட வேண்டும்.

வளர்ச்சி ஊக்கிகள்

🐡 இரண்டு மாதம் வரைக்கும், குளத்தில் உள்ள மீன்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு கிலோ கடலைப் பிண்ணாக்கு போடலாம். இதை இரண்டாக பிரித்து காலையும் மாலையும் போட வேண்டும். மூன்றாவது மாதத்திற்கு மேல் கொழிஞ்சி இலையை வெட்டி, சின்னச்சின்னக் கட்டுகளாக கட்டி குளத்துக்குள் போடலாம். அது தண்ணீரில் அழுகியதும், அதிலிருந்து நிறைய புழுக்கள் உருவாகும். அது மீன்களுக்கு நல்ல உணவாகும்.

🐡 ஆறாவது மாதத்திற்கு மேல் மீன்களுக்கு கோழிக்கழிவு தான் சிறந்த தீவனம் ஆகும். கோழிக்குடல், கறி என்று கறிக்கடையில் வீணாகும் கழிவுகளை வாங்கி வந்து, வேக வைத்து குளத்துக்குள் ஆங்காங்கே போட வேண்டும். அதனால் மீன்கள் நல்ல எடைக்கு வரும்.

🐡 ஜிலேபி மீன்களை குளத்தில் விடலாம். இந்த ஜிலேபி மீன்கள் அடிக்கடி குஞ்சு பொரித்துக் கொண்டே இருக்கும். உணவு பற்றாக்குறை ஆனால் இந்தக் குஞ்சுகளை மீன்கள் சாப்பிட்டுக்கொள்ளும்.

தாவர மிதவைகள்

🐡 குளத்தில் தாவர மிதவைகளை வளர்க்க வேண்டும். குளத்தில் ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் நிரப்பி, நான்கு மூலைகளிலும் தலா ஒரு கூடை சாணத்தைப் போட வேண்டும். பச்சை சாணத்தை உடனடியாகப் போடாமல் ஒரு நாள் வைத்திருந்து தான் போட வேண்டும். மழைநீரை நம்பி வெட்டப்படும் குளமாக இருந்தால் தண்ணீர் நிரப்புவதற்கு முன்பே சாணத்தைப் போட்டு விடலாம். ஐந்து அல்லது ஆறு நாட்களில் சாணம் கரைக்கப்பட்ட தண்ணீர் பச்சை நிறத்துக்கு மாறியிருக்கும். அந்த சமயத்தில் தண்ணீர் மட்டத்தை நான்கடி அளவுக்கு உயர்த்தி, மீண்டும் நான்கு மூலைகளிலும் தலா ஒரு கூடை அளவிற்கு சாணம் போட வேண்டும். அடுத்த பத்து நாட்களில் தாவர மிதவைகள் உருவாகி விடும். தண்ணீர் பச்சை நிறமாக மாறுவதை வைத்து, இதைத் தெரிந்து கொள்ளலாம். இது மீன்களுக்கு முக்கியமான உணவாகும்.

🐡 முடிந்த அளவு இயற்கை உணவுகளை அளித்தால் இதில் அதிக லாபம் பெற முடியும்.

சுகாதார மேலாண்மை

🐡 பண்ணை குளத்தை சுற்றிலும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு முறை அறுவடை முடிந்தவுடன் தண்ணீரை மாற்ற வேண்டும். தீவனங்களை சரியான அளவில் கொடுக்க வேண்டும்.

பாதுகாப்பு முறைகள்

🐡 மீன்களைப் பெரும்பாலும் நோய்கள் தாக்குவதில்லை. நீர் மற்றும் தீவன மேலாண்மையைச் சரியாகப் பராமரித்தாலே போதுமானது.

பூஞ்சண நோய்

🐡 விராலுக்கு மட்டும் குளிர் காலத்தில் பூஞ்சண நோய் வரும். இந்நோய் தாக்கிய மீனின் உடம்பில் சாம்பல் பூசியதைப் போல வெண்மையான படலம் படிந்திருக்கும். நாளாக, நாளாக அது புண்ணாகி விடும். பிறகு பாதிக்கப்பட்ட மீன் கீழே இருக்க முடியாமல் நீர்மட்டத்துக்கு மேலே வந்து விடும். அவ்வாறு பாதிக்கப்பட்ட மீன்களைப் பிடித்து தனியாக புதைத்தோ அல்லது எரித்தோ விட வேண்டும். மஞ்சள், வேப்பிலை ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து, அரைத்துப் பொடித்து அவ்வப்போது குளத்தில் தூவி விட்டால் இந்நோய் தாக்குதல் இருக்காது. அதன் பிறகும் நோய் தாக்குதல் காணப்பட்டால் ஒரு லிட்டர் ஃபார்மாலின் திரவத்தை 40 லிட்டர் நீரில் கலந்து குளத்தில் தெளித்தால் நோய் கட்டுப்படும்.

விற்பனை

🐡 ஆறு மாதம் வளர்ந்த நிலையில் ஒரு மீன் சராசரியாக ஒரு கிலோ எடை இருக்கும். அந்நிலையில் இருந்து விற்பனை செய்யலாம். இதனை வியாபாரிகள் நேரடையாகவே வந்து வாங்கிக் கொள்வார்கள்.

Go to top



கூட்டு மீன் வளர்ப்பு



கூட்டு மீன் வளர்ப்பு முறை: விராலை வளர்த்தால் ரூ.60 ஆயிரம் வருமானம்.

மீன் வளர்ப்பு குளமொன்றில் குளத்தின் மேல் மட்டம் முதல் அடிமட்டம் வரையிலான பல்வேறு பகுதிகளிலும் பரவி அப்பகுதிகளில் இருக்கும் பலவகையான உணவினங்களை உண்டு, இடத்திற்கும் உணவிற்கும் போட்டியில்லாமலும் சண்டையில்லாமலும் கூடி வாழ்ந்து நன்கு வளர்ந்து உயர்வான உற்பத்தியைத் தரக்கூடிய மீன்கள்.

அவை: “கெண்டைகளான கட்லா (நீரின் மேற்பரப்பு), வெள்ளிக்கெண்டை (நீரின் மேற்பரப்பு), ரோகு (நீரின் நடுமட்டம்), மிக்கால் (நீரின் அடிமட்டம்), சாதாக்கெண்டை (நீரின் அடிமட்டம்), புல்கெண்டை (குளத்தின் கரையோரப்பகுதி), வெள்ளிக்கெண்டை

ஆகிய கெண்டைமீன்களை உயிரியல் சூழல் மற்றும் வளர்ப்பியலுக்கு உரிய இன விகிதாச்சாரப்படி சரியாக இருப்பு அடர்த்தியில் இருப்புச்செய்து வளர்ப்பது “கூட்டுமீன் வளர்ப்பு” ஆகும்.

எப்படி வளர்க்கனும்:

கூட்டுமீன் வளர்ப்புக் குளத்தில் புதிய மீன் இனங்களைச் சேர்த்து வளர்க்கையில் ஏற்கனவே உள்ள மீனினங்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது.

கெண்டை, பால்மீன், நன்னீர் இரால் மற்றும் விரால் ஆகியவை கூடுதலாகச் சேர்த்து வளர்க்கலாம்.

புதிய மீன் இனங்களைச் சேர்க்கும்போது அவற்றுக்கு எவ்வளவு இடம் கொடுக்கலாம் என்பதை அதற்கான மீன்வளர்ப்பு அறிவியல் அறிஞரிடம் கேட்டறியலாம்.

ஏன் விரால்?

விரால்களைச் சேர்த்து வளர்ப்பதால் பல பலன்கள் உண்டு.

விரால்களை வளர்ப்பதற்கு தனியான வசதி (குளம்) இல்லாதபோது கூட்டு மீன்வளர்ப்பு குளத்தில் விரால்களைக் கெண்டைகளோடு சேர்த்து வளர்த்து பயன்பெறலாம்.

விரால்கள் மற்ற வளர்ப்பு மீன்களுடன் உணவுக்காக போட்டியிடுவதில்லை.
விரால்களுக்கு விசேட சுவாச உறுப்புகள் உண்டு.

தோலாலும் சுவாசிக்கும். வெளிமடைக் காற்றையும் சுவாசிக்கும்.

சில பயனற்ற, சிறிய நாட்டுக்கெண்டைகள் மற்றும் களை மீன்களை விரால்மீன்கள் உண்டு அழித்துவிடும். எனவே களை மீன்களால் உணவு வீணாவது தடுக்கப்பட்டுக் கெண்டை மீன்களுக்கான தீனி, கெண்டைகளுக்கு முழுமையாகக் கிடைக்கும்.

கெண்டை மீன்களின் உற்பத்தியோடு விரால் மீனின் உற்பத்தியும் குளத்தின் உற்பத்தியாகச் சேர்ந்து கிடைப்பதால் குளத்தின் மொத்த மீன் உற்பத்தியும் லாபமும் அதிகமாக இருக்கும்.

கூட்டுமீன் வளர்ப்பில் இருப்புச் செய்யப்படும் மீன்களுள் 2-5 சதம் மட்டும்விரால் மீன்களை இருப்புச் செய்தால் போதுமானது.

வளர்க்கும் முறை:

விரால்களுக்கு அவற்றுக்குத் தேவையான மாமிச உணவுகளையும் தருவதாயின் அவற்றின் இருப்பளவு 2 சதவீதத்துக்கு மேல் இருக்கலாம் (5 சதவீதத்திற்குள்). இல்லையேல் இருப்பளவு குறைவாகவே இருக்க வேண்டும்.
கெண்டை மீன்களை குறைந்தது 150-200 கிராம் அளவுவரை வளர்த்த பின்னரே விரால் குஞ்சுகளை அல்லது ஓரளவு வளர்ந்த விரால்களை கெண்டைகளின் குளத்தில் இருப்புச் செய்யவேண்டும்.

இதில் கவனக்குறைவு ஏற்பட்டால் விரால் மீன்கள் கெண்டைகளையும் தின்று தீர்த்துவிடும்.

இம்முறைப்படி கெண்டைகளின் வளர்ப்புக்காலம் முழுமையாகவும் (அதிகமாகவும்) விரால்களின் வளர்ப்புக்காலம் குறைவாகவும் இருக்கும். அதாவது விரால்கள் அறுவடைக்கான முழு வளர்ச்சியைப் பெற்றிருக்காது.

இக்குறைபாட்டைத் தவிர்க்க, கெண்டை குஞ்சுகளை தனிக்கவனமுடன் சிறப்பாக வளர்த்து, ஒவ்வொன்றும் 150 கிராமுக்குக் குறையாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்நிலையில் கெண்டைகளையும் விரால் குஞ்சுகளையும் ஒன்றாக ஒரே நேரத்தில் இருப்புச் செய்யலாம்.

கெண்டைகள் ஏற்கனவே ஓரளவு வளர்த்துவிட்டபடியால் விரால்களால் அவற்றுக்கு ஆபத்துவராது.

லாபம் எவ்வளவு?

ஒரு எக்டர் குளத்தில் அதிகபட்சமாக 10 ஆயிரம் மீன்களை (சதுர மீட்டருக்கு ஒன்று) இருப்புச் செய்வதாகக் கொண்டால் அதில் விரால் மீன்களை 2 சதம் மட்டும் இருப்புச் செய்வதாகக் கொண்டால், ஒரு எக்டர் குளத்தில் 200 விரால்களை வளர விடமுடியும்.

வளர்ப்புக் காலத்தில் ஒவ்வொரு விராலும் ஒரு கிலோ வளர்வதாகக் கொண்டால் (சிறப்புத் தீனியும் தந்து) மொத்தம் 200 கிலோ உற்பத்தி கிடைக்கும்.
விரால்களை குறைந்தது கிலோ 300 ரூபாய்க்கு (உயிருடன்) விற்கலாம். விரால்களால் மட்டும் ரூ.60 ஆயிரம் வருமானம் கிட்டும்.

கூட்டின மீன்வளர்ப்பு – 2

குளங்களில் மாறுபட்ட உணவு, இடம், உயிரிவளி ஆகியவற்றைப் போட்டியில்லாமல் பயன்படுத்தும் பல்வேறு இன மீன் குஞ்சுகளை ஒரே குளத்தினில் இருப்பு செய்து வளர்த்தெடுப்பது கூட்டின மீன் வளர்ப்பு முறையாகும். இதன்படி நான்கு முதல் ஆறு வகையான மீன் இனக்குஞ்சுகளையும், நன்னீர் இறாலையும் தேர்வு செய்து குளங்களில் இருப்பு செய்து வளர்ப்பதன் மூலம் மொத்த உற்பத்தியினை பெருக்கலாம்.

கூட்டின மீன்வளர்ப்பில் குளத்தில் உள்ள மூன்று நீர்மட்டங்களான மேல், நடு மற்றும் அடி மட்டத்தில் உள்ள உணவு வீணாகாமல் உபயோகப்படுத்துவதன் மூலம் குளத்தின் உற்பத்தித்திறன் பெருகுகின்றது. இந்த முறையில் இந்தியப் பெருங்கெண்டைகளான கட்லா, ரோகு, மிரிகால், மற்றும் அயல்நாட்டுக் கெண்டைகளான சாதாக்கெண்டை, புல்கெண்டை,  மற்றும் வெள்ளிக்கெண்டை ஆகியவை ஒருங்கிணைத்து வளர்க்கப்படுகின்றன. இவைகளுடன் சில சமயங்களில் நன்னீர் இறாலும் சேர்த்து வளர்க்கப்படுகிறது. இவற்றுள் கட்லாவும், வெள்ளிக்கெண்டையும் முறையே நீரின் மேல்மட்டத்தில் உள்ள விலங்கின மற்றும் தாவர மிதவை நுண்ணுயிரிகளை உண்டு வாழ்கின்றன. ரோகு, நீரின் நடுமட்டத்தில் உள்ள தாவர, விலங்கின நுண்ணுயிரிகளை உண்கிறது. குளத்தின் அடிமட்டத்தில் அல்லது மண்ணில் புதைந்துள்ள உணவுகளை மிரிகாலும் சாதாக்கெண்டையும் உண்டு வளரும். புல்கெண்டை, குளக்கரையோரங்களில் காணப்படும் புற்களையும், இலைகளையும் உண்டு வளர்கிறது.

மீன்குஞ்சுகளை இருப்பு செய்தல்

பொதுவாக ஒரு குளத்தில் / நீர் நிலையில் மீன் வளர்த்தலின் பொருட்டு மீன்குஞ்சுகளை இருப்பு செய்வதற்கு முன்பாக மேற்கொள்ளப்படவேண்டிய அனைத்து நீர் மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளையும் சரிவர மேற்கொள்ள வேண்டும். அதன்பின்னர் குளத்து நீரின் மேல்மட்டம், நடுமட்டம் மற்றும் அடிமட்டத்திலுள்ள உணவுகளை உண்ணும் கெண்டை ரகக் குஞ்சுகளை முறையே 40:20:40 என்ற விகித்தில் இருப்பு செய்ய வேண்டும்.

சாதாக்கெண்டை மற்றும் மிரிகால் இன மீன்குஞ்சுகளின் இருப்பினைக் குறைத்துக் கொண்டு போதுமான அளவு நன்னீர் இறால் குஞ்சுகளை இருப்பு செய்து வளர்க்கும் பட்சத்தில் மேலும் இலாபம் ஈட்டிட வழிவகை உள்ளது.

உணவிடுதல்

மேல் உணவாக அரிசித் தவிடும், கடலைப் புண்ணாக்குத்து¡ள், மீன்து¡ள் முதலியவற்றை சரிசமமாகக் கலந்து 5% மீன்து¡ளுடன் 10% மரவள்ளிக்கிழங்கு மாவு (10 கிராம் மாவினை ஒரு லிட்டர் நீரில் கொதிக்கவைத்து கூழ் போலாக்கி) கலந்து ஆறாவைத்து, பின்னர் கவளம் போல் உருண்டையாக்கி தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் அன்றாடம் மீனின் உத்தேச எடைக்கு 2 – 3% என அளிக்க வேண்டும். (குச்சித்திவனம் உணவாக அளிக்கலாம்) அளவிற்கு அதிகமாக உணவிடக்கூடாது. புல்கெண்டை மீனுக்கு வேலம்பாசி, ஹைடிரில்லா மற்றும் இளம்புற்களையும், தீவனப் புற்களான குதிலை மசால், கினியாப்புல், நேப்பியர்புல் என்பவைகளையும் சிறிது சிறிதாக வெட்டி மூங்கில் பரணில் வைத்து மிதக்கச்செய்து சிறப்பு உணவாக அளிக்க வேண்டும்.

குளங்களின் பராமரிப்பு

இருப்பு செய்யப்பட்ட மீன் குஞ்சுகள் வேகமாக வளர, வளர்ப்புக் குளங்கள் சிறப்பாகப் பராமரிக்கப்பட வேண்டும். வளர்ப்புகுளத்தின் நீர் மட்டம் எப்போதும் ஒரு மீட்டர் ஆழத்திற்கும் குறையாமல் இருக்க வேண்டும்.

இயற்கை உரம் ஒருமுறை, ரசாயன உரம் மறுமுறை என 15 நாள் இடைவெளியில் மாதம் இருமுறை உரமிடவேண்டும்,

உரமிட்டத்தின் பயன், நுண்ணுயிர் மிதவைகளின் பெருக்கத்தின் மூலம் தெரிகின்றதா என்பதை செச்சித் தட்டை (Secchi disc) பயன்படுத்தியும், நுண்ணுயிர் தாவர மிதவைகளை சேகரித்தும் அறிய வேண்டும்.

சில நேரங்களில் பாசி மற்றும் நுண்ணுயிர் தாவர மிதவைகளின் உற்பத்தி அதிகரிக்கும்போது குளத்து நீர் அடர்பச்சை நிறமாக மாறும். இதனைச் சரி செய்ய, மீன்களுக்கு உணவிடுவதை தற்காலிகமாக நிறுத்தவேண்டும். இல்லையெனில், நீர்வாழ் உயிரினங்கள் யாவும் இரவில் சுவாசிப்பதால் உயிர்வளி குறைவு ஏற்பட்டு இதனால் மீன்கள் ஒட்டுமொத்தமாக இறக்க நேரிடும். நீரின் நிறம் பழைய நிலைக்குத் திரும்பியபின் வழக்கம்போல் உணவிடலாம்; உரமும் இடலாம்.

பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை குளத்திலுள்ள நாள்பட்ட பழைய நீரை 10% அளவிற்கு வெளியேற்றி, புதுநீரைப்பாய்ச்ச வேண்டும். இரவில் நீரில் சுழல் சக்கரங்களைப் பயன்டுத்தும் வசதிகளைக் கொண்ட குளங்களில் இத்தகைய நடவடிக்கைகள் பொதுவாக தேவையில்லை.

தவிடு, புண்ணாக்குடன் மீன்து¡ளையோ அல்லது சோயாமாவையோ ஒரு பங்காகச் சேர்த்துப் பயன்படுத்தினால் மீன்களின் வளர்ச்சித்தறன் மேலும் அதிகரிக்கும்.

மாதந்தோறும் நடத்தும் சோதனை மீன்பிடிப்பின்போது, இயன்றவரை மீன்களை அதிகமாகக் கையாளாமல் அவற்றின் எடையை அறியவேண்டும்.

பிடித்த மீன்களின் எடையைக் கணித்தபின் அவற்றை குளத்தில் மீண்டும் விடுவதற்கு முன்னர், தவறாமல் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலில் (1 மி.கி. / லிட்டர்) 2 – 3 நிமிடங்கள் குளியல் சிகிச்சை அளிக்க வேண்டும்.

மீன் பிடித்தல்

மீன்கள் ஆறு அல்லது ஏழாவது மாத இறுதியில் 750 முதல் 1250 கிராம் எடை வரை வளர்ந்து இருக்கும். அச்சமயம் நன்கு வளர்ந்த மீன்களை பிடித்து விற்பனை செய்திட வேண்டும். மீன்களின் தேவை அதிகமாக இருந்தால் எல்லா மீன்களையும் பிடித்து விற்பனை செய்துவிடலாம். நல்ல விலை கிடைக்கவில்லையெனில் அவ்வப்போது சிறிதளவில் பிடித்து, விற்பனை செய்ய வேண்டும். மிதத் தீவிர மீன்வளர்ப்பு முறையில் வளர்க்கப்படும் மீன்கள் உள்ள குளத்தில் 5 – 7 டன் மீன்களை அறுவடை செய்ய வாய்ப்பு உள்ளது.

ஆதாரம் : மீன்துறை ஆணையர் அலுவலகம், சென்னை – 600 006

Go to top



அலங்கார மீன்வளர்ப்பு



ஒரு சிறந்த தொழில்வாய்ப்பு

கண்ணுக்கு அழகான, விதவிதமான வண்ணங்களை கொண்ட சிறுமீன்களை கண்ணாடி தொட்டிகளில் வளர்ப்பது அதிகரித்து வருகிறது. உயிருள்ள காட்சி பொருளாக இருப்பதால் இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவருகின்றன. அலங்கார மீன்களை பொழுது போக்கிற்காக வளர்த்த காலம் மாறி அது நல்ல தொழிலாக மாறியிருக்கிறது. இந்த மீன்களை இனப்பெருக்க அடிப்படையில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் மீன்கள் மற்றும் குட்டியிடும் மீன்கள் என்று பிரிக்கலாம். குட்டியிடும் மீன்களில் கப்பீஸ், மோலி, பிளாட்டி மற்றும் வாள்மீன்கள் முக்கியமானவை.

கப்பீஸ்- இதில் ஆண்மீன்கள் சிவப்பு, பச்சை, கருப்பு,நீலம் மற்றும் கலப்பு நிறங்களிலும் காணப்படுகின்றன. இந்த மீன்களை பராமரிப்பது எளிது. அதிகமான வெப்பநிலையை தாங்கி வளரும். ஆண்மீன்கள் 2.5 சென்டிமீட்டர்நீளம் வரையிலும், பெண்மீன்கள் 5 செ.மீ நீளமும் வளரக்கூடியது. பெண்மீன்கள் 2.5 செமீ மற்றும் ஆண்மீன்கள் 2 செ.மீ வளர்ந்தவுடன் இனப்பெருக்கம் செய்ய தொடங்குகின்றன. இந்த மீன்கள் நன்கு வளரவும், இனப்பெருக்கம் செய்யவும் 22 முதல் 24 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையும், காரஅமிலத்தன்மை 7 முதல் 8க்குள் இருப்பது நல்லது. இந்த மீன்கள் 4 லிருந்து 6 வாரத்திற்குள் குட்டியிடும். பெண்மீன்கள் தாமாகவே தொடர்ந்து குட்டியிடும் தன்மையுடயவை. அலங்கார மீன்வளர்ப்பில் புதிதாக ஈடுபடுவோர் முதலில் இந்த வகை மீன்களை வளர்ப்பது நல்லது.

மோலி மீன்கள்

இந்த மீன்கள் 9 செமீ வரை உப்புத்தன்மையுடைய தண்ணீரில் நன்றாக வளரக்கூடியது. 24 முதல் 28 சென்டிகிரேட் வெப்பநிலையில் வளரும். இவை தாவர வகை உணவுகளையே விரும்பி உண்ணும். மோலி வளர்க்கும் தொட்டிகளில் ஒரளவு சூரிய ஒளி படும் வகையில் இருந்தால் பச்சை பாசிகள் வளரும். இது மீன்களுக்கு உணவாகும். இனப்பெருக்கத்திற்கு ஒரு ஆண்மீனுக்கு 3 முதல் 5 பெண்மீன்களை விடுவது நல்லது. இவை 5 முதல் 10 வார இடைவெளியில் குட்டிகள் போடும். இதில் சில்வர் மோலி, கருமோலி, வெள்ளைமோலி, ஆரஞ்சு மோலி, சாக்லேட் மோலி, செயில் துடுப்பு மோலி ஆகியவை முக்கியமானதாகும்.

பிளாட்டி

பளிச்சிடும் சிவப்பு, பச்சை, நீலப்பச்சை ஆகிய நிறங்களில் பிளாட்டி மீன்கள் காணப்படுகின்றன. ஆண்மீன்கள் 3.8 செ.மீ வளரும். இனப்பெருக்கத்திற்கு ஒரு ஆண்மீனுக்கு 3 பெண்மீன்கள் விடுவது நல்லது. இவை 3,4 வரை இடைவெளியில் குட்டியிடுகின்றன.

வாள்வால் மீன்

பிளாட்டி மீனை போன்று இருக்கும் இந்த மீன்கள் சிவப்பு நிறத்தில் காணப்படும். ஆண்மீன்களில் வால்துடுப்பு, வாள் போன்று நீட்டிக் கொண்டிருக்கும். ஆண்மீன்கள் 8.3 செ.மீ, பெண்மீன்கள் 12 செ.மீ நீளம் வரையும் வளரக்கூடியன. பெண்மீன்கள் 5 செ.மீ நீளத்திற்கு வளரும் போது இனப்பெருக்கம் செய்ய தொடங்குகின்றன. உயிர் உணவுகளையும், தாவர உணவுகளையும் விரும்பி உண்ணும்.

இனப்பெருக்கம்

இனப்பெருக்கத்திற்கு தகுதியான ஆண்மீன்களை அவற்றின் இனப்பெருக்க உறுப்பை கொண்டு அடையாளம் காணலாம். ஆண்மீன்களின் இனப்பெருக்க உறுப்பை கோனோபோடியம் என்று அழைப்பார்கள். ஒரு முறை கருவுற்ற பெண்மீன், 5லிருந்து 6 வாரத்திற்கு ஒரு முறையாக 8 முதல் 10 முறை குட்டியிடும் தன்மை கொண்டது. கருவுற்ற சினை பெண்மீன்களுக்கு வயிறு நன்கு பருத்திருக்கும். பெண்மீன்களின் குதத்திற்கு அருகில் கருமையான புள்ளி ஒன்று காணப்படும். இவ்விரு அறிகுறிகளையும் வைத்து கருவுற்ற மீன்களை அடையாளம் காணலாம்.

ஒரு நேரத்தில் ஒரு பெண்மீன் 50 குட்டிகள் வரை இடும். குட்டிகளின் எண்ணிக்கை, பெண்மீன்களின் நீளத்தையும், வயதையும் பொறுத்து மாறுபடும். பொதுவாக குட்டியிடும் மீன்களை 5-6 வாரத்திற்கு ஒரு முறை இனப்பெருக்கம் செய்தல் நல்லது.

ஒரே தொட்டியில் ஆணும்,பெண்ணும் சேர்த்து வளர்க்கப்பட்ட மீன்களிலிருந்து சேர்க்கை மூலம் கருவுற்ற பெண்மீன்களை வயிறு பெரிதாக காணப்படுவதன் மூலம் அடையாளம் கண்டு அவற்றை தனியாக பிரித்தெடுத்து இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும். சத்தான குறுணை உணவு, புழு போன்றவற்றை அளித்து வந்தால் 4 முதல் 6 வாரத்திற்கு ஒரு முறையென தொடர்ந்து குட்டிகளை பெற்றுக் கொண்டேயிருக்கும்.

சரியான அளவுள்ள கண்ணாடி தொட்டியை நீரால் நிரப்பி, தேர்வு செய்யப்பட்டுள்ள கருவுற்ற பெண்மீனை தொட்டியில் இருப்பு செய்ய வேண்டும். ஒன்று அல்லது இரண்டு நாட்களில் தாய்மீன், குட்டிகளை இடை இடையே வெளியிடும். முழுவதுமாக குட்டிகளை வெளியிட்டதும், தாய்மீனை அப்புறப்படுத்தி விடவேண்டும். பின்னர் இரண்டு நாட்கள் சென்றதும், குட்டிகளை பெரிய தொட்டிக்கு மாற்றி, குறுணை உணவுடன் மிதவை நுண்ணுயிரிகளையும், புழுக்களையும் அளித்து வரலாம்.

நாற்றாங்கால் குளங்கள் அமைத்து அவற்றில் தகுந்த அளவில், சாணம் மற்றும் ரசாயன உரங்கள் இட்டு, மிதவை நுண்ணுயிரிகளை இருப்பு செய்யலாம். அந்த குளங்களில், பிறந்த இளங்குஞ்சுகளை இருப்பு செய்வதன் மூலம் துரித வளர்ச்சி அடைய செய்யலாம். குட்டியிடும் மீன்கள் தான் ஈன்ற குட்டிகளையே உண்ணும் தன்மை உடையவை. எனவே தாயிடமிருந்து குட்டிகளை காப்பாற்றுவது முக்கியம்.

இனப்பெருக்கத்திற்கு தயாராக உள்ள பெண்மீன்களை கையாள்வதில் மிகவும் கவனம் தேவை. தவறுதலாக கையாள்வதால் குட்டிகள் முழுவளர்ச்சி அடையாமல் வெளிவரும் வாய்ப்புகள் உள்ளன.

வண்ணமீன் வளர்ப்பு மூலம் கிராமப்புற இளைஞர்கள் சிறந்த தொழில்வாய்ப்பை பெறலாம். #saringo #saringobusiness

Go to top



அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்



1. எத்தனை வகை மீன் வளர்ப்பு முறைகள் உள்ளன?

நமது நாட்டில் பொதுவாக 5 முறைகள் பின்பற்றப்படுகின்றன. அவை நன்னீர் மீன்வளர்ப்பு, உவர்நீர் மீன்வளர்ப்பு, குளிர்நீர் மீன்வளர்ப்பு, வண்ண மீன் அல்லது அலங்கார மீன்வளர்ப்பு, மற்றும் கடல்நீர் மீன்வளர்ப்பு என்பவை ஆகும்.

2. மீன் வளர்ப்பைப் பாதிக்கும் முக்கியக் காரணிகள் யாவை?

நீரின் வெப்பநிலை, கலங்கல் தன்மை, நீரின் கார அமிலத் தன்மை, கரையும் ஆக்ஸிஜன், (கரியமில வாயு), கார்பன் – டை – ஆக்ஸைடு, மொத்த காரத்தன்மை, நீரின் கடத்துதிறன், மண்ணின் வெப்பநிலை, மண்ணின் கார அமிலத் தன்மை, மண்ணின் அங்கக கார்பன், பாஸ்பரஸ், பொட்டாஷ், நீரின் உயிர்நிறை போன்ற காரணிகள் மீன்வளர்ப்பிற்கு அத்தியாவசியமானவை ஆகும்.

3. பிடிப்பு மீன்வளம் என்பது என்ன?

மீன்கள், சுறா, மெல்லுடலிகள், சிங்கிறால் மற்றும் நண்டு போன்றவற்றை அவை வாழும் இயற்கை வளங்களான ஆறு, கடல், பெருங்கடல் பகுதிகளிலிருந்து பிடித்து மனிதப்பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவதே பிடிப்பு மீன்வளம் ஆகும். நம் நாட்டில் மீன் பிடிப்பு மூலமாக 68 சதம் மீன் கிடைக்கிறது. இம்முறையில் மீன்வளத்தைப் பெருக்குவதற்கு நாம் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.

4. பிற அசைவ உணவுகளை விட மீன் சிறந்த ஆரோக்கியமான உணவாக கருதப்படுவது ஏன்?

தாவர உணவுகளிலிருந்து கிடைக்கும் புரதம் குறைபாடு கொண்ட முட்டை மற்றும் பிற மாமிசங்களை விட மீன்கள் தரமான மாமிசப் புரதங்களை நமக்கு அளிக்கின்றன. மேலும் மீன் இறைச்சியின் கொழுப்புகளில் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்குக் கேடு விளைவிக்கும் கொழுப்பு இல்லை. இதன் விலையும் ஆடு, கோழி போன்ற பிற இறைச்சியுடன் ஒப்பிடும்போது மலிவாகவே உள்ளது.

5. மீன் இறைச்சியில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் யாவை?

மீன்களில் பொதுவாக 60 – 80 விழுக்காடு ஈரப்பதமும், 15 – 24 விழுக்காடு புரதச்சத்தும், 3 – 5 விழுக்காடு கொழுப்புச்சத்தும், 0.4 – 2.0 விழுக்காடு தாது உப்புக்களும் உள்ளன. தாது உப்புக்களைப் பொறுத்த வரையில் சோடியம், பொட்டாஷியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, அயோடின், குளோரின் கந்தகம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், தாமிரம், துத்தநாகம், கோபால்ட், ஆர்செனிக் மற்றும் ஃபுளோரின் போன்ற சத்துக்கள் அடங்கி உள்ளன.

6. கூட்டு மீன் வளர்ப்பிற்கு பெருங்கெண்டை மீன் இனங்களே அதிகம் பரிந்துரைக்கப்படுகின்றன. ஏன்?

ஏனெனில் பெருங்கெண்டை மீன் இனங்கள் தாவர உணவுகளையும், கழிவுகள் மற்றும் சிறிய விலங்கினங்களையும் உண்ணுகின்றன. எனவே உற்பத்தி செய்வது எளிது. மேலும் இவை விரைவில் வளர்ந்து பெரிய அளவை அடைந்துவிடுகின்றன.

7. கெண்டை மீனில் எத்தனை வகைகள் உள்ளன?

கட்லா, ரோகு, மிர்கால் ஆகியவை இந்தியப் பெருங்கெண்டை இனங்கள். வெள்ளிக் கெண்டை, புல் கெண்டை, மற்றும் சாதாரண கெண்டை போன்றவை அயல்நாட்டு கெண்டைகள். இவற்றில் இந்திய கட்லா இனம் மிக வேகமாக வளரும் தன்மை கொண்டது.

8. மீன்குளம் அமைப்பது பற்றிக் கூறவும்?

ஒரு மீன் வளர்ப்புக் குளத்தைக் குறைந்தது ¼ ஏக்கர் (1000 ச.மீ) பரப்பிலாவது அமைத்தால், இலாபகரமாக மீன் வளர்ப்பை மேற்கொள்ளலாம். மீன் வளர்ப்புக் குளங்களைச் செவ்வக வடிவத்தில் சுமார் 1 ஏக்கர் முதல் 2.5 ஏக்கர் (1 எக்டர்) கொண்டவைகளாக அமைத்துக் கொள்ளலாம். குளங்களைச் சதுர வடிவில் அமைக்கும் போது அமைக்க வேண்டிய கரையின் நீளம் குறைகிறது. இருப்பினும், மீன்களை எளிதாக அறுவடை செய்வதற்கு செவ்வக வடிவ குளங்களே ஏற்றவை. தற்போது தண்ணீர் பற்றாக்குறை அதிகரிப்பதால் குளங்களை ¼ முதல் 1 ஏக்கர் பரப்பளவு கொண்டவைகளாகவும் அமைத்துக் கொள்ளலாம்.

9. குளங்களை ஏன் காயவைக்க வேண்டும்?

இதனால், குளங்களின் அடிப்பகுதியிலுள்ள அங்ககக் கழிவுகள் மற்றும் சேற்றிலுள்ள நச்சுயிரினங்கள், போன்றவை அழிக்கப்படுவதோடு, அடிப்பகுதியிலுள்ள நச்சு வாயுக்களும் வெளியேறுகின்றன. குளத்தை வடித்த நிலையில் கரிய நிறத்துடனும் துர் வாடையுடனும் காணப்படும் அடிப்பகுதி காய்ந்த பிறகு அங்குள்ள நச்சுத்தன்மை குறைவதால், நிறம் மாறி துர்வாடையின்றி இருக்கும். குளங்களை வருடம் ஒருமுறை நன்கு காயவிடுவதால், குளங்களின் உற்பத்தித் திறனைச் சிறப்பாகப் பராமரிக்கலாம்.

10. ஒரு எக்டர்க்கு எத்தனை மீன் குஞ்சுகளை இருப்புச் செய்யலாம்?

ஒரு எக்டர்க்கு 5,000 முதல் 10,000 வரை விரலளவு வளர்ந்த குஞ்சுகள் என்ற அளவில் இருப்புச் செய்யலாம். மீன்குஞ்சுகளைப் பொறுத்தமட்டில் குறைந்தபட்சம் 3 – 4 அங்குல நீளும் வளர்ந்தவையாக இருத்தல் நல்லது.

11. மீன்களை எத்தனை முறை அறுவடை செய்யலாம்?

பொதுவாக தற்போது கடைப்பிடிக்கப்படும் வளர்ப்பு முறைகளில் குளங்களில் விடப்படும் மீன்கள் அனைத்தும் ஒரே எடையுடன் சீரான வளர்ச்சியை பெறுவதில்லை. எனவே மீன்களை ஒட்டுமொத்தமாக அறுவடை செய்வதைவிட அவ்வப்போது வளர்ந்த மீன்களை பகுதி பகுதியாக அறுவடை செய்வது நல்லது. வளர்ந்த மீன்களை அவ்வப்போது அறுவடை செய்வதன் மூலம் குளத்திலுள்ள மீத மீன்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம். நமது பகுதியில் விற்பனைக்கு உகந்த எடையை மீன்கள் அடையும் போது மீன்களை அறுவடை செய்யலாம். விரால்களை இருப்புச் செய்து வளர்க்கும் பண்ணைகளில், சாதாரணமாக ஆறு மாதங்களுக்கு மேல், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம்.

12. குளங்களில் பிராணவாயு பற்றாக்குறையை எவ்வாறு சமாளிப்பது?

பிராணவாயு பற்றாக்குறைவு ஏற்பட்டால் மீன்கள் அனைத்தும் மேல்மட்டத்திற்கு வந்து சுவாசித்துக் கொண்டு இருக்கும். இத்தகைய நிலை கோடையில் அதிகாலை வேளைகளில் ஏற்படும். இதனை சீர்செய்ய குளத்தில் நீர்மட்டத்தின் ஆழத்தை 41/2 முதல் 5 அடியாக அதிகரிக்கலாம். ஓரளவு அடிமட்ட நீரை வெளியேற்றி விட்டு புதுநீர் பாய்ச்சலாம். மீன்களை கொஞ்சம் அறுவடை செய்து அவற்றின் அடர்த்தியைக் குறைக்கலாம்.

மீன்களின் இருப்படர்த்தியை கட்டுப்படுத்துதல், நீரின் ஆழத்தை உகந்த நிலையில் பராமரித்தல் மற்றும் அடிமட்ட நீரை ஓரளவு வெளியேற்றி புதுநீர் பாய்ச்சுதல் போன்ற நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு நீரின் தரத்தைப் பராமரிக்கலாம்.

13. மனிதர்கள் பயன்படுத்தும் பொதுக்குளங்களில், சாண மற்றும் இரசாயன உரங்களை உபயோகிக்க முடியவில்லை. இக்குளங்களில் மீன் உற்பத்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்?
அரிசித் தவிடு, கடலைப்பிண்ணாக்கு, சோளமாவு, சோயாமாவு, குறுணை போன்ற பொருட்களைக் கலந்து தயாரிக்கப்பட்ட மேலுணவினை, குளத்தில் இருக்கும் மீன்களின் மொத்த எடையில், சுமார் 2 – 3 விழுக்காடு ஒரு நாளுக்கு என்ற அளவில், தினசரி அளித்திடல் வேண்டும்.

பொதுமக்கள் பயன்படுத்தும் குளங்களில், நீர் நிறைந்துள்ள காலங்களில் பொதுவாக சாணமோ, சுண்ணாம்போ போட முடிவதில்லை. எனவே, குளத்தில் நீர் சேரும் காலத்திற்கு முன்பே லேசான ஈரப்பதத்தில் உழவு செய்து எக்டருக்கு 200 கிலோ என்ற அளவில் காளவாய் சுண்ணாம்பு இடுவது நல்லது. கழிவுகள் அதிகளவில் சேரும் குளங்களுக்கு எக்டருக்கு 400 முதல் 500 கிலோ அளவிற்கு சுண்ணாம்பின் அளவை அதிகரிக்கலாம். குளங்களில் ஆழமான பகுதிகளிலும், வண்டல் கழிவுகள் அதிகம் சேர்ந்துள்ள பகுதிகளிலும் கூடுதலாக சுண்ணாம்பு இட வேண்டும்.


Go to top



No comments:

Post a Comment